×

மாஜி பெண் அமைச்சரின் உறவினர் என்று கூறி அதிகாரி போடும் ஆட்டத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சொல்லுவாங்க… அதுபோல இலை கட்சியின் மாஜி பெண் மந்திரியின் பினாமியான அதிகாரி கரன்சிகளை குவித்து தள்ளுகிறாராமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தலைநகரமான சென்னையில் அரசு ஆசிரியர் விடுதி செயல்பட்டு வருகிறது. பணி நிமித்தமாக வரும் ஆசிரியர்கள் இங்கு  குறைந்த கட்டணத்தில் தங்கலாம். ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறி உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சொல்றாங்க. அந்த விடுதியில் பொறுப்பாளராக இருக்கும் வாசமானவரு, அதிமுகவின் மதியான முன்னாள் பெண் அமைச்சரின் உறவினர் என்று சொல்லி ரொம்ப ஓவராக தனது வேலையை காட்டி வர்றாராம். அறை வேண்டி வரும் ஆசிரியர்களுக்கு ஒழுங்காக அறையை ஒதுக்குவது இல்லையாம். ஆசிரியர் அல்லாத தனக்கு வேண்டியவர்களை விடுதியில் தங்க அனுமதிக்கிறாராம். அவர்களும் தாராளமாக கரன்சியை அள்ளி தெளிக்கிறாங்களாம். அவ்வாறு தங்குபவர்கள் இரவில் போடும் ஆட்டத்தை பார்த்து… அங்கு தங்கும் நிஜமான ஆசிரியர்கள் பயந்து போய் இருக்காங்க.  அப்படியே சில ஆசிரியர்கள் அறை வாடகை கட்டும்போது ஒழுங்காக பில் கொடுப்பது இல்லையாம். வாங்கும் கட்டணம் ஒன்றாம்.. பில் அதைவிட குறைவாக இருக்காம். விளக்கம் கேட்டால், நான் மாஜி பெண் அமைச்சரின் சொந்தக்காரன், என்கிட்டேயே கணக்கு கேட்கிறாயா என்று மிரட்டுகிறாராம். பதவி போனாலும் அவரது பெயரை சொல்லி கல்லா கட்டுவதில் மாஜி பெண் அமைச்சரின் உறவினர் கெட்டிக்காரராக இருக்கிறாராம். இதனால் அரசுக்கு வரவேண்டிய பணம்.. தனி நபர் பாக்கெட்டுக்கு போகுதாம். இதனால், அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டு வருதாம். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இது தொடர்பாக கண்ணீரோடு முதல்வர் தனிப்பிரிவு,  அமைச்சரிடம் புகார் அளித்து இருக்காங்க. இதற்கான விடை விரைவில் தெரியும் என்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘எங்க காவல் அதிகாரியை எங்களுக்கே திருப்பி கொடுங்கனு பொதுமக்கள் யாரையோ கேட்கிறார்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்ட காவல் துறை உயரதிகாரியாக இருந்தவர் தற்போது கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், குமரி மாவட்டத்தில் பணியாற்றிய, 2021ம் ஆண்டில் மட்டும் 338 கஞ்சா விற்பனை வழக்குகள் போடப்பட்டு, 342 பேர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையாளர்கள் மட்டுமின்றி, அதை பயன்படுத்தும் நபர்கள் மீதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளி அசத்தினாராம். இதனால் கஞ்சா வாங்க ஆள் இல்லாததால் கஞ்சா விற்பனை கும்பல் கடுப்பாகி இருந்தது. இப்போது இவர் டிரான்ஸ்பரில் சென்றுவிட்டதால் கஞ்சா விற்பனை கும்பல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாம். எனவே, அந்த மாவட்ட மக்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க மீண்டும் அந்த பழைய அதிகாரியை எங்கள் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கணும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு அந்த காக்கி உயரதிகாரியின் செயல்பாடு இருந்ததாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நூறு நாள் வேலைக்கு ரூபாய் நோட்டு கொடுத்தாதான் வேலைன்னு ஒருவர் கறார் கட்டுகிறாராமே…’’ என்று கோபமாக கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல கலசம் என்ற பெயர்ல தொடங்கும் ஒன்றியத்துல, பாளையம்னு முடியுற பஞ்சாயத்து இருக்காம். இங்கே, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 500க்கும் மேற்பட்டவங்க வேலை செய்றாங்க. இதற்காக போட்டோவுடன் கூடிய ஜாப்கார்டு இருக்கணும். இது இருந்தால் தான் வேலைக்கு வர முடியுமாம். இதனால இந்த ஜாப்கார்டு கொடுக்குறதுக்கு அந்த பஞ்சாயத்து செக்ரட்ரிக்கு, பச்சை கலர் காந்தி நோட்டை கையில கொடுத்தா தான், ஜாப்கார்டு கொடுக்குறாராம். இல்லைனா, நோ கார்டுன்னு சொல்லிடுறாராம். அதோட, பிரதம மந்திரியோட வீடு வழங்கும் திட்டத்துல, வீடுகட்டுறதுக்கு 83 பயனாளிகளுக்கு பணி ஆணை கொடுத்திருக்காங்க. இப்ப நிதி ஒதுக்கீடு செய்றதுக்கு முன்னாடி, பஞ்சாயத்து செக்ரட்ரியும், தலைவரோட வீட்டுக்காரரும் கமிஷன் கேட்குறாங்களாம். இதனால, ஏழை மக்கள் புலம்பி வர்றாங்களாம்… இதுக்கு விடிவுகாலம் வருமானு ஏக்கத்தில் இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசு மணலையே கொள்ளையடித்து, அதை கரன்சியாக மாற்றிய ‘தில்’லான அதிகாரி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மன்னர் மாவட்டத்தில் மாதா பெயர் கொண்ட ஒரு பெண் தாசில்தார் முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாய்க்கு மணல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மன்னர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. பின்னர் சிலர் கோர்ட்டுக்கு சென்றதால் மணல் விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் மணல் குவாரிகளில் உள்ள மணல் அப்படியே அதே இடத்தில் கிடந்தது. இந்நிலையில் மன்னர் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதி பெண் தாசில்தார் குவாரியில் குவித்து வைத்திருந்த மணலை பறிமுதல் செய்யப்பட்டது போல் கணக்கு காட்டியுள்ளார். அதன்பின் தனியாரிடம் பேரம் பேசி கோடிக்கணக்கில் பணம் பெற்று மணல் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் எந்தவித சட்ட நடைமுறைகளையும் கடைபிடிக்கவில்லை என்று வருவாய்த்துறையினர் பேசி வருகின்றனர். இந்த செய்தி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தவுடன் இதனை சரிகட்ட அந்த மாதா பெயர் கொண்ட தாசில்தார் பிரச்னை கிளப்பும் நபர்களை சரிகட்டி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.     …

The post மாஜி பெண் அமைச்சரின் உறவினர் என்று கூறி அதிகாரி போடும் ஆட்டத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Leaf Party ,Adhikari Karanshi ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...